எடப்பாடி பழனிசாமி தான் என்றும் முதல்வர் என்பதில் உறுதி… செல்லூர்ராஜூ கருத்துக்கு ராஜேந்திர பாலாஜி ட்வீட்!!

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தான் என்றும் முதல்வர் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலக்கை நிர்ணயித்துவிட்டு தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு பிறகு எம்எல்ஏக்கள் கூடி முதலமைச்சரை தேர்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருந்தார். நேற்று மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி கண்மாய் பகுதியில் ரூ.90 லட்சம் மதிப்பில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா பற்றி எங்களுக்கு கவலையில்லை. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும், அதிமுக மிகப்பெரிய வலுப்பெறும். தேர்தலுக்காக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நன்றாக செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் பணியாற்றி வருகிறது என்றார்.

தொடர்ந்து, அவரிடம் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். அதிமுக எப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் நடைபெறும்.

அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஒரு குடும்ப கட்சி. அங்கு வாரிசு அரசியல் நடைபெறுகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. எங்களது கருத்தை ஏற்று அதிமுகவிற்கு திமுகவினர் யார் வந்தாலும் வரவேற்போம். ஏன், பாஜகவின் நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு வந்தாலும்கூட வரவேற்போம்.

கு.க.செல்வம் திமுகவிலிருந்து பாஜவுக்கு சென்றது அவரது விருப்பம்” என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இந்த ட்வீட் அதிமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே