சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பல்வேறு திட்டப் பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திரும்ப திரும்ப பொய் பேசி வருவதாகக் குற்றம்சாட்டினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பொய் மூட்டை என்றும் கடுமையாக விமர்சித்தார்.
உள்ளாட்சி தேர்தலை நிறுத்த பல வழிகளில் அதிமுக அரசு முயற்சித்து வருகிறது என்றும், மறைமுகமாக வேறு ஆட்களை வைத்து அதிமுக வழக்கு தொடர்வதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுகவை பொறுத்தவரையில், பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.
மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை என்றும், தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் நீதிமன்றம் சென்றோமே தவிர, தேர்தலை நிறுத்த அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார்.