தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றன.
அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் பதவிகள் குறித்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது.
அதில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், அரசியல் கட்சி சார்பில் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் 1064 வார்டுகள் உள்ளன. அதே போல் 121 நகராட்சிகளில் உள்ள 3 ஆயிரத்து 468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் 8288 வார்டுகளும் உள்ளன.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை தமிழகத்தில் 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 655 வார்டுகள் உள்ளன.
அதே போல் 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6471 வார்டுகளும், 12524 கிராம ஊராட்சிகளில் 99 ஆயிரத்து 324 வார்டுகள் உள்ளன.
மேயர்களை வாக்காளர்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையில் மாநகராட்சியில் வசிக்கும் வாக்காளர்கள் தங்களது வார்டு உறுப்பினருக்கு ஒரு வாக்கும், மேயருக்கு ஒரு வாக்கும் என இரண்டு வாக்களிக்க வேண்டும்.
இந்நிலையில் மேயருக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டால் மாநகராட்சியில் வசிக்கும் வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் வார்டு உறுப்பினருக்கு மட்டும் வாக்களித்தால் போதும்.
தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை வார்டு உறுப்பினர்கள் யாரை தேர்வு செய்வார்களோ அவரே மேயராக பதவி ஏற்பார்.
இவ்வாறு மேயர் பதவிக்கு வார்டு உறுப்பினர்கள் மூலம் மறைமுகத் தேர்தல் நடத்த 2016 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டத் திருத்தம் செய்தார்.
அவரது மறைவிற்குப் பிறகு பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கடந்த 2018 ஆம் ஆண்டில் மேயர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறையை மீண்டும் கொண்டு வந்தது.
இந்த நிலையில் மீண்டும் மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்தது.