திமுக பொதுக் குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, தேர்தலில் வாக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறை ஆகிய தீர்மானங்கள் திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக தலைமை நிலைய நிர்வாகிகள், பொதுக்கு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4500 பேர் பங்கேற்றுள்ளனர்.

பெயருடன் கூடிய அழைப்பிதழ்கள் வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இதில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மு.க.ஸ்டாலினின் தனிச் சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதில் இந்திய அரசியல் சட்டத்தின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

நிதி, கல்வி, மானியம், கடன் வழங்குதல் போன்றவற்றில் மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்க திமுக பொதுக் குழு வலியுறுத்தியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர் என்ற சட்டத்திருத்தத்தை திரும்ப பெறுதல், பிறப்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்துதல், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு போன்றவற்றை திமுக பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.

தனிச் சிறப்பு தீர்மானம் தவிர்த்து 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, சிலைக்கு அவதூறு ஏற்படுத்தியதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் எனவும், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கையை திரும்பப்பெறவும், தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே திமுகவின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அக்கட்சியில் பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரம் திமுக தலைவருக்கும் வழங்கப்பட்டது.

இளைஞரணி பொறுப்பில் இருப்பவர்கள் திமுகவில் வேறு பொறுப்புகள் வகிக்க முடியாது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை திமுகவில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு அங்கேயே கிளை அமைத்துக் கொள்ளலாம்.

அகில இந்திய கட்சியாக தரம் உயர்த்தும் வகையில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உறுப்பினர்களை சேர்த்து தமிழகத்தைப் போலவே அங்கும் செயற்குழு, பொதுக்குழு அமைத்துக் கொள்ளலாம்.

இணையதளம் வழியாகவும் உறுப்பினராக சேர்ந்துக்கொள்ளலாம்.

திருநங்கைகளை உறுப்பினர்களாக சேர்க்கும் வகையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனிடையே மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு பொதுக் குழுவில் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய நிர்வாகிகள், கட்சிக்குள் அணிகளாக இருந்து கொண்டு செயல்படுபவதாக தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், கட்சிக்குள் அணிகள் இருப்பதில் தவறில்லை என்றும், ஆனால் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக அவர்கள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஒற்றுமை இல்லாமல் என்ன உழைத்தாலும் சாதாரணமாக வெற்றி கிடைக்க விடமாட்டார்கள் ஸ்டாலின் எனவும் குறிப்பிட்டார்.

அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே