திருச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை குடிபோதை இளைஞன் ஒருவன் கடத்திச் சென்ற நிலையில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று ஓட்டுநர் பேருந்தை மீட்டுள்ளார்.
கரூரில் இருந்து திருச்சி வந்த தீபாவளி சிறப்பு அரசுப் பேருந்து ஒன்றை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுநரும் நடத்துநரும் மதிய உணவு வாங்கச் சென்றுள்ளனர்.
உணவு வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது பேருந்தைக் காணாமல் அதிர்ச்சியடைந்தவர்கள், போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
அங்கு நின்றிருந்தவர்கள் பேருந்து சென்ற திசையைக் கூறவே, இருசக்கர வாகனம் ஒன்றை எடுத்துக் கொண்டு விரட்டிச் சென்றனர்.
சாலையில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்த பேருந்தை மன்னார்புரம் அருகே மடக்கியபோது, குடிபோதை இளைஞன் ஒருவன் ஓட்டிவந்தது தெரியவந்தது.
அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்ற அந்த இளைஞனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.