இரட்டை இலை மக்களின் இதயக்கனி – அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி..!!

“அதிமுகவை அடக்கவும் முடியாது. இரட்டை இலையை முடக்கவும் முடியாது. இரட்டை இலை அதிமுகவின் இதயக்கனி” என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.

தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் மூலம் மதுரை மாவட்டம் மேற்கு தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வீரம் உடையார் கண்மாய் அணையை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது:-

திமுகவினர் மாநகராட்சி பகுதியில் கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறது. திமுக நடத்தி வரும் கிராமசபை கூட்டத்தை கண்டு நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும்.

கிராமசபை கூட்டத்திற்கு 200 முதல் 300 ரூபாய் பணம் கொடுத்து பொதுமக்களை அழைத்து வருகிறார்கள்.

அவரது காலத்தில் இந்த பகுதியில் என்ன மாதிரியான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றது என கூற முடியுமா? இன்னும் முப்பது நாட்களில் மதுரையில் தங்குதடையின்றி கழிவு நீர் கலக்காத சுத்தமான குடிநீர் வழங்கப்படும். திமுக ஆட்சி காலத்தில் இந்த பகுதியில் ரவுடி தொல்லை அதிகமாக இருந்தது. தேர்தலின்போது மக்களைப் பார்க்கும் கட்சி நாங்கள் இல்லை.

தேர்தல் என்பதால் தற்போது கிராமசபை கூட்டம் போடுகிறார்கள். காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி குறை பேசி வருகிறார்கள். திமுகவினர் பத்தாண்டுகளில் மக்களை சந்தித்தார்களா, தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்ப்பது மக்கள் பணி இல்லை.

எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டத்தை கேலி கிண்டல் பேசியவர்கள் தான் திமுகவினர்.

அதிமுக காலத்தில் 4,500 க்கும் மேற்பட்ட பெண் சிசுக்கொலைகள் தடுக்கப்பட்டு அந்த குழந்தைகள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர்.

நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். ஸ்டாலின், திமுக-விற்கு செல்வாக்கு உள்ளது என்றால் நேரடியாக சவால் விடுகிறேன். உதயசூரியன் சின்னத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியுமா?. இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது, இழந்த சின்னத்தை மீண்டும் பெற்ற ஒரே கட்சி அதிமுக. இரட்டை இலை மக்களின் இதயக்கனி. 2021ல் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்.

மத்தியில் இருக்கும் அமித்ஷாவே எங்கள் கட்சிக்கு ஆதரவாக இருப்போம் என கூறிவிட்டார்கள். தேவையில்லாமல் குழப்பத்தை உருவாக்க வேண்டாம். நியாய விலைக் கடைகளில் டோக்கன் வழங்குவதில் கடுகளவு கூட எந்த இடத்திலும் பிரச்னை இல்லை, உரிய வழிமுறைகளைப் பின்பற்றிய டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.”என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே