அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு 3 நாட்களில் பதில் கிடைக்கும் – எல்.முருகன் பேட்டி..!!

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்வதாகவும், கூட்டணி தொடர்பான மற்ற விவரங்கள் ஓரிரு நாட்களில் தெரிய வரும் என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எல்.முருகன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன்; வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கையெழுத்து பெறப்பட்ட மனுவை முதல்வரிடம் அளித்ததாக கூறினார்.

மேலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடர்வதாகவும், கூட்டணி தொடர்பான மற்ற விவரங்கள் ஓரிரு நாட்களில் தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.

கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை தான் அறிவிக்கும் என்றும் ஆட்சியிலும் பங்கு என்ற பொருளுடன் பாஜக நிர்வாகிகள் பேசி வந்தனர்.

இதனை மறுக்கும் வகையில் அதிமுக தலைவர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி; கூட்டணிக்கு அதிமுவே தலைமை வகிக்கும் என்று கூறினார்.

இதேபோல் ஆட்சியில் யாருக்கும் பங்கு இல்லை என்றும் கூட்டணி வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியே என்றும் மறைமுகமாக பாஜகவுக்கு அவர் பதிலளித்தார்.

ஆனால் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் எல்.முருகன் அது குறித்து கேள்விகளுக்கு ஏதுவும் பதிலளிக்கவில்லை. மாறாக ஓரிரு நாட்களில் அடுத்தகட்ட முடிவு பற்றி தெரிய வரும் என கூறிவிட்டு புறப்பட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே