குணமடைந்த நபரின் கருத்தை அறிய முயற்சி செய்ய வேண்டாம் – கொரோனா குறித்து விஜயபாஸ்கர் தகவல்..

கொரோனா வைரஸ் தொடர்பாகத் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165-ஐ தாண்டியுள்ளது.

இதனால் பல மாநிலங்களில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டார், மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் உட்பட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு சோதனை நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் அனைத்து விமானநிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் முழு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறை உருவாக்கப்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

அதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட அறை உருவாக்கப்பட்டு வருகிறது. இதை அவர்களாகவே முன்வந்து செய்கின்றனர்.

உண்மையில் இது பாராட்டுக்குரிய விஷயம், நேற்று தனியார் மருத்துவமனை மருத்துவர்களை கானொலி காட்சி மூலம் அழைத்து வைரஸ் தொற்றுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, நோயாளிகளை எப்படி அணுக வேண்டும் போன்ற அனைத்து நடைமுறைகளையும் அவர்களுக்குத் தெரிவித்துள்ளோம்.

மேலும், இந்த வைரஸ் தொடர்பாக அவர்களுக்கே சில சந்தேகங்கள் இருந்தது அதையும் நாங்கள் தீர்த்துவைத்துள்ளோம்.

எனவே, தமிழகத்தில் அனைத்து வழிகளிலும் மக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முழு வீச்சில் செய்து வருகிறது.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் தற்போது முழுவதும் குணமடைந்துவிட்டார், அவர் நம் மருத்துவர்களின் சிறப்பான பணியால் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார்.

அவரது உடல் நன்கு முன்னேறியதும் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி அவருக்கு இரண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த இரண்டிலும் நெகட்டிவ் என்று வந்ததும்தான் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அவர் தற்போது எங்கு உள்ளார், யார் அவர் போன்ற எந்த விஷயங்களையும் நாங்கள் வெளியிட விரும்பவில்லை.

இது நோயாளியின் நலன் கருதியும் பொதுமக்களின் நலன் கருதியும் மருத்துவ விதிமுறை படியும் நாங்கள் அதை வெளியிட மாட்டோம்.

அந்தப் பொறியாளர் தற்போது மருத்துவமனையில் இல்லை; வீடு திரும்பிவிட்டார். இருந்தும் 14 நாள்கள் அவரை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தி எங்கள் தரப்பிலிருந்து அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தே அவரை அனுப்பிவைத்துள்ளோம்.

நிலைமை சீரானதும் அவரே ஊடகங்களைச் சந்திப்பார்.

தமிழகத்தில் அனைத்தும் நடைமுறைகளும் மிகச் சரியாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த வைரஸை விரட்ட மக்களுக்கும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

எங்கள் தரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளும் முதல் வேண்டுகோள் மக்கள் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான்.

அனைவரின் நலனும் எங்களுக்கு மிக முக்கியம்.

எனவே, இரண்டு வாரங்களுக்குப் பொதுமக்கள் பயணங்களில் ஈடுபட வேண்டாம். அதற்காகவே அனைத்து சுற்றுலா, தொழிற் நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன.

தினமும் மாலை 3 மணிக்கு தமிழகம் முழுவதும் கொரோனா தொடர்பான தகவல்களைச் சேகரித்து மக்களுக்கு வழங்கி வருகிறோம்.

வைரஸ் தொடர்பாக சமூகவலைதளங்களில் யாரும் தவறான செய்திகள் பரப்ப வேண்டாம் அதையும் மீறிச் செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில் மூலமாக வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்குப் பயணிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.

இதனால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது 40% வரை மக்களே தங்கள் டிக்கெட்டுகளை கேன்சல் செய்து வருகின்றன.

இதேபோல் அனைத்து மக்களும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே