தமிழ்நாட்டில் கண்டறிந்துள்ள இரண்டாவது கொரோனா பாதிப்பின் மூலம் இந்தியா மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளதா?

தமிழ்நாட்டில் இரண்டாவதாக பாதிக்கப்பட்ட நோயாளி கொரோனா பாதித்த நாடுகளுக்கு செல்லவில்லை, நாடுகளுக்கு சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இல்லை. உத்தர பிரதேச ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த அவர் சென்ற இடம் எல்லாம் டெல்லி மற்றும் சென்னை தான்.

அதுவும் வேலை தேடி உத்தர பிரதேசத்திலிருந்து கிளம்பியுள்ளார். டெல்லியில் வேலை தேடி அலைந்துள்ளார்.

அங்கு கிடைக்காததால் சென்னையில் சலூன் கடையில் ஒன்றில் வேலை பார்க்கும் தனது நண்பர் அழைத்ததன் காரணமாக ரயில் மூலம் 12ம் தேதி சென்னை வந்துள்ளார். நண்பர்களுடன் அறையில் தங்கியிருந்திருக்கிறார்.

எந்த இடத்திலும் வெளிநாடு சென்று வந்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததாக தெரியவில்லை.

இப்படி இருக்கையில் இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதால் இந்தியா கொரோனா பாதிப்பின் மூன்றாவது கட்டத்தில் இருக்கிறோமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

எந்தவொரு தொற்று நோய் பரவலையும் நான்கு கட்டங்களாக பிரிக்கலாம்.

முதல் கட்டம்- வைரஸ் எங்கிருந்து வந்தது என தெளிவாக தெரியும்.

உதாரணம் – கேரளாவின் முதல் மூன்று நோயாளிகள். வைரஸ் பாதித்த சீனாவின் ஊஹான் பகுதியிலிருந்து வந்தவர்கள், தமிழ்நாட்டில் பாதித்தவர் ஓமன் நாட்டிலிருந்து வந்தவர்.

இரண்டாவது கட்டம்- வைரஸ் பாதித்த இடங்களுக்கு சென்றவர்கள் அங்கு செல்லாதவர்களுக்கு பரப்புதல்.

ஆனால் யார் மூலமாக பரவியது என கண்டறிய முடியும். அது தான் காண்டேக்ட் ட்ரேசிங் முறை.

உதாரணமாக டெல்லியில் உயிரிழந்த 68 வயது மூதாட்டி சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி சென்றதால் வைரஸ் பாதித்த தனது மகனிடமிருந்து வைரஸ் பரவியுள்ளது.

தமிழ்நாட்டில் ஓமன் நாட்டிலிருந்து வந்தவருடன் தொடர்பில் வந்த 27 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா தற்போது இந்த நிலையில் இருப்பதாக தான் மத்திய அரசும் மாநில அரசும் கூறுகிறது.

மூன்றாவது நிலை என்பது சமூக பரவல் அதாவது யாரிடமிருந்து வைரஸ் பரவியது என்பதை கண்டறிய முடியாது.

இந்த நிலை வந்துவிட்டால், யாரிடமிருந்து வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் பரவும் அபாயகரமான சூழலை எட்டிவிடுவோம்.

தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு எங்கிருந்து வைரஸ் பரவியிருக்கக் கூடும் என்பதை அதிகாரிகள் உறுதியாக கூற முடியவில்லை.

எனவே நாம் நோய் பரவலின் மூன்றாவது கட்டத்தை ஏற்கெனவே அடைந்து விட்டோமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே