குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500..; 6 சிலிண்டர்கள் இலவசம் – அதிமுக தேர்தல் அறிக்கை..!!

அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையாக மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1500 உதவித்தொகை, ஒரு குடும்பத்துக்கு 6 சிலிண்டர் இலவசம் என அறிவிப்பு வர உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றன. மக்கள் மனம் கவர பல அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் போட்டிபோட்டு அறிவிக்கின்றன.

பொதுவாகத் தேர்தல் அறிக்கையில் மக்கள் மனம் கவரும் அறிவிப்புகள் வரும்.

ஆனால், சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் விவசாயக் கடன் தள்ளுபடி, 6 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்து பரபரப்பூட்டினார் முதல்வர் பழனிசாமி.

திமுக தன் பங்குக்கு நேற்று ஏழு பிரகடனங்கள் வெளியிட, அதில் முக்கிய அறிவிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.

அது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அதில் பேசிய முதல்வர் பழனிசாமி,

* குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 செலவீனத் தொகை வழங்கப்படும்.

* ஒரு குடும்பத்துக்கு வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். இது தேர்தல் அறிக்கையில் வரும் என அறிவித்தார்.

இது எங்கள் கட்சியின் அறிவிப்பு. அதைத் தெரிந்துகொண்டு ஸ்டாலின் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துவிட்டார் எனவும் முதல்வர் குற்றம் சாட்டினார்.

திமுக, அதிமுக போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அம்சங்களை அறிவித்து வரும் வேளையில், இன்னும் என்னென்ன இருக்குமோ என வாக்காளர்கள் ஆவலாக உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே