இந்திய அணி ஏதேனும் ‘மிஷின்’ வைத்திருக்கிறார்களா? ஒவ்வொரு பிரிவுக்கும் இளம் வீரர்களை உருவாக்கி அனுப்புகிறது: இன்சமாம் உல் ஹக் வியப்பு கலந்த பாராட்டு

இந்திய அணி ஏதேனும் மிஷின் வைத்திருக்கிறார்களா. டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டி என ஒவ்வொரு பிரிவுக்கும் வீரர்களை தயாரித்து அனுப்புகிறார்கள். இளம் வீரர்கள் அருமையாக விளையாடுகிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். டெஸ்ட் தொடரை வெல்வதற்கு ரிஷப்பந்தின் பேட்டிங், முகமது சிராஜின் பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்தது. ஒருநாள் டி20, போட்டிகளில் நடராஜனின் பந்துவீச்சு முத்தாய்பாக அமைந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், டி20 தொடரிலும் இளம் வீரர்கள் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், குர்னல் பாண்டியா என கலக்கி வருகின்றனர். இந்திய இளம் வீரர்களின் செயல்பாட்டை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் யூடியூப் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இந்திய அணி ஏதேனும் “மிஷன்” வைத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. டி20, ஒருநாள், டெஸ்ட் என 3 பிரிவுகளுக்கும் சிறந்த, திறமையான இளம் வீரர்களை தயாரித்து அனுப்பிக்கொண்டே இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு அறிமுகமக வீரர்களான குர்னல் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா சிறப்பாக விளையாடினர். இதன் மூலம் இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்கள் பொறுப்பாக விளையாடி தங்களின் இடத்தைத் தக்கவைக்காவிட்டால், அந்த இடம் இளம் வீரர்களுக்குச் சென்றுவிடும் என்ற தெளிவான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரானத் தொடரிலிருந்து பார்த்து வருகிறேன், இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள், அவர்களின் வெற்றிக்கான பங்களிப்பு இங்கிலாந்து தொடரிலும் தொடர்ந்து வருகிறது.

ஆஸ்திரேலியத் தொடரில் ஒவ்வொரு பிரிவிலும், ஒவ்வொரு போட்டியிலும் ஒரு இளம் வீரர் சிறந்த பங்களிப்பை அளித்தார். மூத்த வீரர்களும் வெற்றிக்கு காரணமாக இருந்தாலும், இளம் வீரர்களின் செயல்பாடு, அதிகமாகப் பேசப்பட்டது.கடந்த 6 மாதங்களாக இந்திய அணியின் செயல்பாடு தங்களின் இளம் வீரர்களால் சிறப்பாக இருந்து வருகிறது.

அதனால்தான் கூறுகிறேன், இந்திய அணி ஏதேனும் மிஷின்(இயந்திரம்) வைத்திருக்கிறதா. இப்படி திறமையான இளம் வீரர்களை ஒவ்வொரு பிரிவுக்கும் உருவாக்கி அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்திய அணிக்கு விக்கெட் தேவையெனும்போது, முதல் போட்டியில் விளையாடிய இளம் வீரர் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான் மீண்டும் கூறுகிறேன், ஒவ்வொரு பிரிவுக்கும் வீரர்களை தயாரிக்கும் மிஷினை இந்தியா கண்டறிந்துள்ளது.

இந்திய அணி முதல்தரமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள், வலிமையான இங்கிலாந்து அணியைக்கூட எளிமையாகக் கையாள்கிறார்கள். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ, ஜேஸன் ராய் இருவரின் ஆட்டமும் கடினமானதாக இருந்தது. ஆனால், மனம் தளராமல், இந்தியப் பந்துவீச்சாளர்களின் முயற்சி, துல்லியமான பந்துவீச்சு, இங்கிலாந்து அணியை வீழ்த்திவிட்டது.

இவ்வாறு இன்சமாம் உல் ஹக் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே