மதுரை வரும் பிரதமரிடம் இந்த 6 கேள்விகளை கேட்க முதல்வர் பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா? – ஸ்டாலின்

பிரதமர் மோடி நாளை மதுரை வரும்போது முதல்வர் பழனிசாமி, சிஏஏ, நீட் தேர்வு ஆகியவற்றைத் திரும்பப் பெறுங்கள் என்று பிரதமரிடம் சொல்ல முடியுமா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப். 01), மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்தில் பேசியதாவது:

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தாராபுரம் வந்து பேசினார். அதற்கு நான் அப்போதே பதில் சொன்னேன். அவர் நாளையும் மதுரைக்கு வருவதாக எனக்குச் செய்தி வந்திருக்கிறது. எனவே, நான் அவரிடத்தில் ஒரு அன்போடு, உரிமையோடு ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.

2015-ம் ஆண்டு நீங்கள் பட்ஜெட் அறிவித்தபோது மதுரையில் எய்ம்ஸ் உருவாக்கப்படும் என்று அறிவித்தீர்கள். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வந்து அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றீர்கள்.

நீங்கள் இன்றைக்கு இரவே மதுரைக்கு வரப் போகிறீர்கள். நாளை காலையில் மதுரையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசப்போகிறீர்கள். இன்றைக்கு இரவோ அல்லது நாளை காலையிலோ, யாருக்கும் தெரியாமல் நீங்கள் அந்த எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தின் நிலை என்ன ஆனது என்று போய்ப் பாருங்கள். நீங்கள் சொன்னது கட்டப்பட்டதா? செங்கல் வைத்துவிட்டுச் சென்றேனே… அது எங்கே? என்று கேளுங்கள்.

அதேபோல, முதல்வராக இருக்கும் பழனிசாமிக்கு ஒருசில கோரிக்கைகளை வைக்க நான் விரும்புகிறேன். நீங்கள் பிரதமருக்கு அருகில்தான் உட்காரப் போகிறீர்கள். அப்போதோ அல்லது நீங்கள் பேசுகிறபோதோ ஒரு சில கோரிக்கைகளை வையுங்கள்.

அது என்னவென்றால், சிஏஏ என்ற ஒரு சட்டம், அது சிறுபான்மை சமுதாயத்திற்குப் பல கொடுமைகளை, முஸ்லிம் சமுதாயத்திற்குப் பல கொடுமைகளை இழைக்கும் சட்டம். அந்தச் சட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள். அதைக் கொண்டு வந்தபோது திமுக எதிர்த்தது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கிட்டத்தட்ட 2 கோடி கையெழுத்து வாங்கி தமிழ்நாட்டு மக்கள் சார்பில், திமுக சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்திருக்கிறோம். பல மாநிலங்களில் அதை எதிர்க்கிறார்கள். மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக ஆளுகின்ற மாநிலங்களிலும் கூட அதை எதிர்க்கிறார்கள். ஆனால், அதிமுக அதை ஆதரிக்கிறது. உங்கள் எம்.பி.க்கள் அதை ஆதரித்து ஓட்டு போட்டு இருக்கிறார்கள். பாமகவும் அதை ஆதரித்து ஓட்டு போட்டு இருக்கிறது.

இப்போது தேர்தல் வந்தவுடன் அந்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், அதை நாங்கள் எதிர்ப்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறீர்கள். அதை ஆதரித்த நீங்கள் இப்போது எதிர்ப்போம் என்று மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லி இருக்கிறீர்கள். இருந்தாலும் அதை உள்ளபடியே நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால், பிரதமர் நாளைக்கு வரும்போது, அதைத் திரும்பப் பெறுங்கள் என்று சொல்லும் ஆற்றல் பழனிசாமிக்கு இருக்கிறதா? அதேபோல, பிரதமரைப் பார்த்து தயவுசெய்து நீட் தேர்வைத் திரும்பப் பெறுங்கள் என்று சொல்லும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறதா?

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்துங்கள் என்று தயவுசெய்து சொல்ல வேண்டும். அதே போல, பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பல புயல்களைப் பார்த்தோம். பல சேதங்களைப் பார்த்தோம். அதற்காக பல கோடி ரூபாய் நிதி கேட்டு, கொஞ்சம்தான் கொடுக்கப்பட்டது. மீதமிருக்கும் நிதியை அனுப்பி வையுங்கள் என்று தயவுசெய்து கேட்க வேண்டும்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைய நாடுகள் இலங்கையை எதிர்த்து வாக்களித்த போது நீங்கள் மட்டும் ஓட்டு போடாமல் வெளியில் சென்று ஒரு நாடகம் நடத்தி விட்டீர்கள். இது நியாயமா? என்ற கேள்வியையும் கேட்க வேண்டும்.

கடைசியாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை நாங்கள் கொண்டு வந்தோம். அதை மத்திய அரசு எதிர்த்தது. உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இது நியாயமா? என்று தயவுசெய்து நீங்கள் கேட்க வேண்டும்.

எங்களுக்கு வேண்டியது தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். எனவே, அந்தக் கேள்விகளை கேட்க பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா? இல்லை”.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே