திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததில் இருந்து வருமான வரித்துறை சோதனையும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலு, அமைச்சர்கள் எம்.சி.சம்பத்தின் உறவினர் வீடு, அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சகோதரர் கல்லூரியில் பணியாற்றும் ஊழியரின் வீடு என வருமான வரித்துறை பட்டியல் நீண்டது.
இந்நிலையில் தற்போது வருமான வரித்துறையினர் சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை – மருமகன் சபரீசன் இல்லத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .
அதே போல் அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க ஏதுவாக வருமான வரித்துறையினர் பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.