மருத்துவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கடந்த ஐந்து நாட்களாக நீடித்து வந்த போராட்டத்தை தள்ளிவைப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 25ந் தேதி முதல் தமிழக முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

உயிர்காக்கும் அவசர சிகிச்சை தவிர மற்ற பணிகளை புறக்கணித்ததால், புறநோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, மருத்துவர் சங்கப் பிரதிநிதிகளுடன் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவர் சங்கத்தினருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை தள்ளிவைப்பதாக அறிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் போராட்டத்தை கைவிட்டு இன்று பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே