சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம், அரியானூரில் தொடங்கி கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக தாம்பரம் வரை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள், அரசியல் கட்சிகள் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், இந்த திட்டத்திற்கு எதிராக விவசாயிகள், நில உரிமையாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கான அறிவிப்பாணையை 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் 8- ஆம் தேதி ரத்து செய்தது.

மேலும், ரூபாய் 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,900 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்தப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் ரத்து செய்து, இந்த திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரக் காலத்தில் திருப்பி தரவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

அதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது செல்லும் என்று கூறி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் சுற்றுச்சூழல் முன் அனுமதி தேவை என்பதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

அதேசமயம், புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்குத் தடை விதித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே