துணி மாஸ்க் பயன்படுத்துகிறீர்களா?: அப்படியானால் இதை கண்டிப்பாக கடைபிடியுங்கள்..!

துணியால் ஆன முகக்கவசங்களை தினமும் வெந்நீரில் சோப் போட்டு கழுவி பயன்படுத்தினால் மட்டுமே கொரோனா தொற்று பரவுவதை குறைக்க உதவும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்ட துணி முகக்கவசம், சர்ஜிகல் முகக்கவசம் இரண்டுமே மாசுபட்டதாக கருதவேண்டும் என இந்த ஆய்வை நடத்திய ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ரெய்னா மேக்இன்டைர் தெரிவித்துள்ளார்.

துணியால் ஆன ஒரே முகக்கவசத்தை பல நாட்களுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்த நாம் தூண்டப்படுகிறோம்.

அல்லது அதை கையால் நீரில் கசக்கி போடுகிறோம்.

இந்த செயல்களால் வைரஸ் தொற்று பரவும் ஆபத்து அதிகரிக்கும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாஷிங் மெஷினில் 60 டிகிரி சூட்டில், உரிய சலவை பொடியுடன், துணியிலான முக கவசங்களை சலவை செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், சர்ஜிக்கல் மாஸ்க், மற்றும் துணி மாஸ்க் இரண்டுமே எளிதில் அசுத்தமாகக் கூடியவை.

இதில் சர்ஜிக்கல் மாஸ்க்கை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீண்டும் அதனை பயன்படுத்தக் கூடாது.

ஆனால் துணை மாஸ்கை துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் துணி மாஸ்க்கை தினமும் துவைக்க வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தும் போதே அது கிருமிகள் படிந்து அசுத்தமாகிவிடும். கண்ணுக்கு அழுக்காக தெரியவில்லை என்றாலும் அது ஆபத்தானது தான்.

கிருமிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க் அணிவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதனை தினமும் துவைப்பதும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே