திருச்சி காவலர் பயிற்சி கல்லூரியில் திருநங்கை தற்கொலை முயற்சி.! 2 போலீசார் பணியிடை நீக்கம்.!

திருச்சி நவல்பட்டு காவலர் பயிற்சிப் பள்ளியில் திருநங்கைக்குப் பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டின்பேரில் எஸ்.ஐ., ஏட்டு ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் தேனியைச் சேர்ந்த 25 வயது திருநங்கை தேர்ச்சி பெற்றார்.

இவர், கடந்த 6 மாதமாக திருச்சி மாவட்டம் நவல்பட்டில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.

இங்கு பயிற்சி அளிக்கக்கூடிய சிலர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக பயிற்சி பள்ளி முதல்வரிடம் திருநங்கை அண்மையில் புகார் அளித்தார்.

இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தும்படி டி.ஜி.பி கரன்சின்ஹா (காவலர் பயிற்சி) உத்தரவிட்டார். 

அதன்பேரில் ஐ.ஜி. சாரங்கன் (பயிற்சி), டிஐஜி சத்யபிரியா (பயிற்சி) ஆகியோர் மேற்பார்வையில் சென்னையிலுள்ள பயிற்சிப் பள்ளியின் எஸ்.பி. ஆறுமுகசாமி கடந்த 8-ம் தேதி நவல்பட்டு பயிற்சிப் பள்ளிக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர்.

அதற்கடுத்த நாளன்று, காயத்தைக் குணப்படுத்தப் பயன்படுத்தும் மருந்தைக் குடித்து திருநங்கை தற்கொலைக்கு முயன்றார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையே, பணியிடத்தில் பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘விசாகா கமிட்டி’யின் பார்வைக்கும் திருநங்கையின் புகார் கொண்டு செல்லப்பட்டது.

பெண் காவல் அதிகாரிகளை உள்ளடக்கிய விசாகா கமிட்டியினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக நவல்பட்டு பயிற்சிப் பள்ளியின் பயிற்சியாளர்களான சப் இன்ஸ்பெக்டர் என்.அருண் அசோக்குமார், தலைமைக் காவலர் இஸ்ரவேல் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து டிஐஜி எம்.சத்யபிரியா (பயிற்சி) தற்போது உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “எஸ்.பி. ஆறுமுகசாமி நடத்திய விசாரணை அறிக்கையும், விசாகா கமிட்டியின் விசாரணை அறிக்கையும் தனித்தனியாக டிஜிபியிடம் தாக்கல் செய்யப்பட்டன.

அதில் முதற்கட்டமாக அருண் அசோக்குமார், இஸ்ரவேல் ஆகியோர் திருநங்கையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரியவந்ததால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருவர் மீதும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது” என்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே