திமுக பேரணி – மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 8000 பேர் மீது வழக்குப்பதிவு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவான முடிவை எடுத்துள்ளது.

ஆனால் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அதில் எதிர்ப்பு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கு அனுமதி கேட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அனுமதி தரவில்லை.

இதையடுத்து பேரணிக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொடரப்பட்டது.

அதில் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று காலை சென்னை தாளமுத்து நடராசன் மாளிகை அருகே தொடங்கி ராஜரத்தினம் மைதானம் வரை பேரணி நடைபெற்றது.

இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 98 அமைப்புகள் கலந்து கொண்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பேரணி வீடியோ பதிவு செய்யப்பட்டது. ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்றன.

இறுதியாக ராஜரத்தின மைதான மேடையில் ஏறி தலைவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

சிறு சலசலப்பும் இல்லாமல் அமைதியான முறையில் நீதிமன்ற உத்தரவுப்படி பேரணி நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னையில் பேரணி நடத்தியது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 8,000 பேர் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக கூடியது, அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே