குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின் படி இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்காக தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.  

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு பாதிப்பு என அரசியல் கட்சியினர் சிலர் பீதியை கிளப்பப்புவதாக தெரிவித்தார்.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு நாட்டுக்கும் மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி காலத்திலு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை ரஜினி சுட்டிக்காட்டினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி, வேறு நாட்டு ஆட்களை அடையாளம் காண முடியும் என்றும் ரஜினி கேள்வி எழுப்பினார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்படுவது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காத போது, அதை பற்றி ஏன் பிரச்சனை செய்ய வேண்டும் என்றும் ரஜினி வினவினார்.

இந்த விவகாரங்களில் மாணவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற அவர், எனவே போராடும் முன்பு மாணவர்கள் தீர்க்கமாக சிந்திக்க அறிவுறுத்தினார்.

ஒரே ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் ரஜினி சுட்டிக்காட்டினார்.

தான் முறையாக வருமான வரி செலுத்தி வருவதாகவும், சட்டவிரோதமாக எந்த தொழிலும் செய்யவில்லை என்றும் ரஜினி தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் ஆணையத்திடம் இருந்து சம்மன் வரவில்லை என்றும் ரஜினி தெரிவித்தார்.

மேலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் ரஜினி கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே