நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக திமுக எம்.பி. டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. ஏழைகளுக்கு மருத்துவப் படிப்பை எட்டாக்கனியாக்கும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி நாளை காலை 8 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர். பாலு; நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ், கம்யூ. கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர். 

நாடாளுமன்றம் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தில் கூட்டத் தொடரில் நீட், சென்னை – சேலம் 8 வழிச்சாலை, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 பிரச்சினைகளை உடனடியாக நாடாளுமன்றத்தில் எழுப்ப நேரம் ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாகத் கூறினார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே