மொழிரீதியாக பாகுபாடு காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு  கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

யோகா, நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி கடந்த 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தை சேர்ந்த 37 பேர் உள்பட நாடு முழுவதும் 350-கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியுள்ளார்.

அப்போது குறுக்கிட்ட தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கோரியுள்ளனர்.

ஆனால், தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது. இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என ராஜேஷ் கொடேஜா தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட மருத்துவர்களை இந்தி தெரியவில்லை என்றால் கூட்டத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று கூறிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக திமுக எம்பி கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில், மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக் கொள்ளப் போகிறோம், என பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் எனக்கூறிய ஆயுஷ் அமைச்சக செயலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ மொழிகள் மற்றும் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன, என குறிப்பிட்டுள்ளார்.

மொழிரீதியாக பாகுபாடு காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதை உறுதிசெய்ய நாய்க் தனது அமைச்சகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் வழிநடத்துமாறும், கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, இந்தி பயன்படுத்தப்படும்போதெல்லாம் ஆங்கிலத்தில் தொடர்புடைய மொழிபெயர்ப்பு அதற்காக வழங்கப்பட வேண்டும், என்றும் கனிமொழி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே