உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளின் மரண அடி வாங்கி அவமானத்தை சந்தித்துள்ளது அதிமுக அரசுதான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்தில் திமுக என்றும் மக்களைச் சந்திக்கத் தவறியதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் தேர்தலை நடத்திடத் துடிக்கும் அதிகார அடிமையான அதிமுக அரசுக்கு, தமிழக மக்கள் தக்க பாடம் புகட்ட தயாராக இருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

ஜனநாயகத்தின் உயிரோட்டம் அதன் ஆணிவேர்களான ஊராட்சி மன்றங்கள் வரை நடைபெற வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள இயக்கம் திமுக என்று தெரிவித்துள்ள அவர், நாடாளுமன்ற களம் இனிப்பான பரிசையும், இடைத்தேர்தல் களம் கசப்பான பாடத்தை தந்துள்ளதை மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல் ஆணையம் மாநில அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சனம் செய்துள்ள மு.க,ஸ்டாலின், திமுகவினர் வாக்காளர்களின் நம்பிக்கையை பெரும் வகையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே