மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதற்கு திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது சர்வாதிகார போக்கு என சாடியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி நேரடித் தேர்தல் நடத்தாமல் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

மறைமுக தேர்தல் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தெம்பிருந்தால் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும் என்றும் தமிழக அரசுக்கு பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சவால் விடுத்துள்ளார்.

அதேநேரம் முதலமைச்சரை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்வது போலவும், பிரதமரை எம்.பி.க்கள் தேர்ந்தெடுப்பது போலவும், மேயரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் சட்டம் ஏற்கெனவே இருந்த நடைமுறைதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் வரவேற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே