முடிவுக்கு வருமா மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம்..!!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவியது.

இதையடுத்து ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது.

இதனிடையே, பாஜகவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

3 கட்சிகளும் தொடர்ந்து பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தின.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், டெல்லியில் கட்சியின் மேலிடத் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரை நேற்று சந்தித்துப் பேசினர்.

இதனை தொடர்ந்து சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க சோனியா ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சோனியாவுடன் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் இன்றும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

அதன்பின்னர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மும்பை சென்று சிவசேனா நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச உள்ளனர்.

3 கட்சிகளும் இணைந்து தற்போதுதான் முதன்முறையாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியை சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் தலா இரண்டரை ஆண்டுகள் என்ற சுழற்சி முறையில் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அல்லது அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இதன் முடிவில் வெள்ளிக்கிழமை ஆட்சியமைக்க உரிமை கோர 3 கட்சிகளும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே