பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் உள்ளிட்ட 5 பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசின் 53.29 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கவும், பங்குகளை வாங்கும் நிறுவனத்துக்கே நிறுவனத்தின் நிர்வாக உரிமையை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதேபோல இந்திய கப்பல் கழகம், இந்திய கன்டெய்னர் கழகம், டெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகம், வடகிழக்கு மின்சக்தி கழகம் ஆகியவற்றின் பங்குகளுடன், அதன் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.
குறிப்பிட்ட சில பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசின் பங்குத்தொகையை 51 சதவீதத்துக்கும் குறைவாக வைத்திருக்க இசைவு தெரிவிக்கப்பட்டது.
எனினும் நிர்வாக கட்டுப்பாடு மத்திய அரசிடமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.