திமுக பொருளாளர் பதவியில் இருந்து விலகினார் துரைமுருகன்

க.அன்பழகன் மறைவினால் காலியாக இருக்கும் திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளார்.

திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் தலைவருக்கு அடுத்தநிலையில் இருப்பது பொதுச்செயலாளர் பதவியே.

கடந்த 43 ஆண்டுகளாக தனது இறப்பு வரை க.அன்பழகன் திமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்துவந்தார்.

கடந்த மார்ச் 7ம் தேதி அவரின் மறைவையடுத்து பொதுச்செயலாளர் பதவி காலியானது.

திமுகவில் அண்ணா, நெடுஞ்செழியன், க.அன்பழகன் ஆகியோர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவி வகித்துள்ள நிலையில் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக வரும் 29ம் தேதி திமுகவின் பொதுக்குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடுகிறது.

இதனிடையே திமுகவின் பொருளாளராக இருந்த துரைமுருகன், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துரைமுருகனின் விலகல் காரணமாக வரும் மார்ச் 29ல் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் திமுகவின் பொருளாளர் பதவியில் அமரப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, பொன்முடி ஆகியோரில் ஒருவர் திமுக பொருளாளராக தேர்வாவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே