தீங்கு விளைவிக்கும் எந்த திட்டத்துக்கும் அனுமதி இல்லை; அதானி துறைமுக திட்டத்தை ஆதரிக்க மாட்டோம்: தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்துக்கு எங்கள்அரசு ஆதரவு அளிக்காது என்று பொன்னேரியில் நடந்ததேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திருவொற்றியூர் தேரடியில் நேற்று மாதவரம் தொகுதி அதிமுகவேட்பாளர் மாதவரம் மூர்த்தி, திருவொற்றியூர் தொகுதி அதிமுகவேட்பாளர் கே.குப்பன் ஆகியோரை ஆதரித்து திறந்த வேனில்துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சமூக, பொருளாதாரத்தை முன்னேற்றவும் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றினார். அந்த திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் முதல்வர் பழனிசாமியும் நிறைவேற்றி வருகிறார். திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு, மின்சார தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.

காவிரி போன்ற ஜீவாதாரப் பிரச்சினைகளை திமுக அரசு தீர்த்து வைக்கவில்லை. ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி ஜீவாதார உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.

மத்திய அரசு தமிழகத்துக்கு அதிகம் நிதி ஒதுக்குகிறது. ஓராண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொடுத்தது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. கரோனா மீண்டும் பரவுவதால் பொதுமக்கள் தவறாமல் மாஸ்க் போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் உறுதியாக நிறைவேற்றுவோம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு 6 சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசம், வாஷிங் மிஷின் இலவசம் போன்ற திட்டங்கள் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றார்.

அங்கிருந்து பொன்னேரிக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவேட்பாளர் சிறுணியம் பலராமன், கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் எம்.பிரகாஷ் ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது, “காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்துக்கு எங்கள் அரசு ஆதரவு அளிக்காது. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே