தொலைக்காட்சியை போட்டால், திமுகவினர் அதிமுகவினரை திருடன் என்றும், அதிமுகவினர் திமுகவினரை திருடன் என்றும் திட்டிக்கொள்கின்றனர் என ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் ஐஜேகே சார்பில் போட்டியிடும் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதாவை ஆதரித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் மனைவியும் அக்கட்சியின் நிர்வாகியுமான ராதிகா சரத்குமார், நேற்று (ஏப்.03) இரவு ஜெயங்கொண்டத்தில் திறந்த வேனில் நின்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது:
டிவியை போட்டால், திமுகவினர் அதிமுகவினரை திருடன் என்றும், அதிமுகவினர் திமுகவினரை திருடன் என்றும் திட்டிக்கொள்கின்றனர். ஆனால், இருவரும் நாங்கள் திருடர்கள் இல்லை என மறுப்பு தெரிவித்து இருவரும் விளம்பரம் செய்யவில்லை.
திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்களித்தது போதும், இந்த முறை தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள். ஜெயங்கொண்டம் தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகள், பெண்களின் பிரச்சினைகள், இளைஞர்கள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர சொர்ணலதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழகம் ஏற்கெனவே கடனில் உள்ள நிலையில், மேலும், பல இலவச திட்டங்களை அறிவித்து தமிழகத்துக்கு கூடுதல் கடனை கொண்டு வரவுள்ளனர். லஞ்சம், ஊழல் ஆரம்பிக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான். பெண் மற்றும் மண்ணின் உரிமைக்காக போராடியவர் காடுவெட்டி குரு. எனவே, ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து சொர்ணலதாவை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.