தமிழகத்தில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை அரசு அறிவித்திருக்கிறது.

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒதுக்கியுள்ள உபரி தொகைக்கு ஏற்ப 20 சதவீதம் வரையிலும், பிற கூட்டுறவு சங்கங்களில் உள்ள தகுதியுடைய பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு ரப்பர் கழகம், வன தோட்ட கழகம், தேயிலை தோட்டம், சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கணையம் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்களுக்கு உபரி தொகையை கருத்தில் கொண்டு 20 சதவீதம் அல்லது 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதமும், லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 503 தொழிலாளர்களுக்கு, 472 கோடியே 65 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே