லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை முழுமையாக மீட்பதில் சிரமம் இருப்பதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரில் உள்ள நகை கடைகள், அடகு கடைகள் மற்றும் வங்கிகளின் பாதுகாப்பு குறித்த விளக்கக் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சுவராஜ் மற்றும் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளை சேர்ந்த கடை உரிமையாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் உட்பட சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் அமல்ராஜ், திருச்சி நகைகடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருவாரூர் முருகன் 23 வருடமாக திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் கொள்ளையடித்த நகைகளை முழுமையாக மீட்பதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வங்கிகள், நகைக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் காப்பீடும் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.