பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறாயா எனக் கேட்கவில்லை; முற்றிலும் தவறானது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்

பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறாயா என்று நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவரிடம் கேட்கவில்லை. எங்களின் கேள்வி முற்றிலும் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் பெண்கள் மீது உயர்ந்த மதிப்பு வைத்துள்ளோம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் மின்துறையில் பணியில் இருப்பவர் மோஹித் சுபாஷ் சவான். இவர் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் .

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மோஹித், கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டேவின் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாலசுப்ரமணியன், போபண்ணா அமர்வின் கீழ் இரு நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றம் சாட்டப்பட்டவரிடம், “பாதிக்கப்பட்ட பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறாயா? எனக் குற்றம் சாட்டப்பட்டவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியது கடும் சர்ச்சையை எழுப்பியது.

பெண்ணிய அமைப்புகள், பெண்ணியவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்குத் தலைமை நீதிபதி மன்னிப்பு கோர வேண்டும் எனப் பெண் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள் வலியுறுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் அலுவலர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், ” உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆவணங்கள் அடிப்படையில்தான் கேள்வி எழுப்பினர். அவர்களாக எந்தக் கேள்வியும் கேட்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இருப்பினும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் அமர்வு கேட்ட கேள்விக்கு எதிராகப் பெண்கள் அமைப்பினர் தொடர்ந்து கண்டனம் எழுப்பி வந்தனர்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சிக்கும் போக்கிற்கு பார் கவுன்சில் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. நீதித்துறையையும், நீதிபதிகளையும் அரசியல் லாபத்துக்காக அவமானப்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள் எனக் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வேறொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 14 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் வயிற்றில் வளரும் 26 வார சிசுவைக் கலைக்க அனுமதி கோரிய இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று காணொலியில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, உலக மகளிர் தினமான இன்று, “பலாத்காரக் குற்றம் சாட்டப்பட்டவரிடம்” கடந்த வாரம் கேட்ட கேள்வி தொடர்பாக விளக்கம் அளித்தார்.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் (சிறுமி) வழக்கறிஞர் வி.வி.பிஜூ ஆஜரானார். அவர் வாதிடுகையில், ” சில குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள், நீதித்துறையை அவமானப்படுத்த முயல்கிறார்கள். இதைக் கையாள தனியாகச் செயல்முறை அவசியம்” எனத் தெரிவித்தார்.

அதற்குத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், “எங்கள் முன் வந்த எந்த பலாத்கார வழக்கு என்று எங்களுக்கு நினைவில்லை. நான் என்னுடைய சகோதரர்களிடம் (சக நீதிபதிகள்) கேட்டேன். அவர்களுக்கும் நினைவில்லை. ஆனால், நாங்கள் பெண்கள் மீது மிகவும் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளோம். நாங்கள் வைத்திருக்கும் மதிப்பு எப்போதும், பார் கவுன்சில் கையிலும் வழக்கறிஞர்கள் கையிலும் இருக்கிறது.

பலாத்காரம் செய்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா எனப் பாலியல் பலாத்காரக் குற்றம் சாட்டப்பட்டவரிடம் நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் கேட்டது என்பது, “நீங்கள் திருமணம் செய்யப் போகிறீர்களா” என்றுதான் கேட்டோம். திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்கவில்லை. எங்களின் வார்த்தை முற்றிலும் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே