இன்று தொடங்குகிறது இந்தியா- வங்கதேசம் இடையேயான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் முதன்முறையாக இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இதனால் இரு அணிகளும் இளஞ்சிவப்பு நிற பந்துகளை பயன்படுத்த உள்ளன. 

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் என்ற வரலாற்றுப் பெருமையும் இந்த போட்டிக்கு கிடைக்க உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை மயாங் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கோலி, ரோஹித் சர்மா, புஜாரா ஆகியோர் சிறப்பாக விளையாடினால், வங்கதேச அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

எனவே 2வது ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் இறங்குகிறது.

இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இந்த பகலிரவு டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 

இரு அணிகளும் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதால், வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடுவது சவாலாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இளம்சிவப்பு நிற பந்து ஹாக்கி பந்தை போலவும், கடினமாக இருப்பதாகவும் கோலி கூறியுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே