முதல்வரை தொடர்ந்து அம்மா உணவகத்தில் சாப்பிட்ட துணை முதலமைச்சர்..!

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட துணை முதல்வர் அம்மா உணவகத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், சந்தைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

நேற்று சென்னை மயிலாப்பூர், பட்டினபாக்கம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு திடீர் ஆய்வு பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உணவு சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா என்பது குறித்து பார்வையிட்டார்.

பின்னர் அங்கு உணவு அருந்த வருபவர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். 

இந்நிலையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் கொரோனா பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.

இந்நிலையில், தேனி உழவர் சந்தையில் 18 வகையான காய்கறிகளை ரூ.150-க்கு வழங்கும் காய்கறி தொகுப்புப் பை திட்டம் உருவாக்கப்பட்டது.

அந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு மதுரை மாநகராட்சியிலும் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

அதைத் தொடர்ந்து தற்போது வீடு தேடி மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் தேனியில் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.

அத்துடன், உழவர் சந்தையில் ரூ.150க்கு காய்கறிகள் பொட்டலங்கள் தயாரிக்கப்படுவதையும் நேரில் ஆய்வு செய்தார்.

சந்தைகளில் சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அவர், அங்குள்ள அம்மா உணவகத்திற்கு சென்று உணவின் தரம், சுகாதாரம் குறித்து பார்வையிட்டதுடன், இட்லிகளை சாப்பிட்டு பரிசோதித்துள்ளார்.

தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் அம்மா உணவகத்தில் சாப்பிட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே