ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.20 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி..!!

சென்னையில் நடந்து வரும் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.20 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

2021-ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் சென்னையில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் நடந்து வருகிறது.

இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலைக் கடந்த மாதமே அளித்துவிட்டன.

மேலும், ஏராளமான வெளிநாட்டு வீரர்களும், உள்நாட்டு வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.

ஒட்டுமொத்தமாக 1,114 சர்வதேச, உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துப் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.

இதில் 8 அணிகளும் வீரர்களின் பட்டியலை உறுதி செய்து 292 வீரர்களே ஏலத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளன.

இதில் 164 இந்திய வீரர்கள், 115 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் என 292 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். 61 இடங்களுக்கு 292 வீரர்கள் ஏலத்தில் போட்டியிடுகின்றனர்.

ஐபிஎல் ஏலம் தொடங்கியவுடன் கர்நாடக வீரர் கருண் நாயர் ரூ.50 லட்சம் அடிப்படை விலைக்கு அறிவிக்கப்பட்டார்.

ஆனால் ஏற்கெனவே மோசமான ஃபார்மில் இருக்கும் கருண் நாயரை எந்த அணியினரும் விலைக்கு வாங்க வரவில்லை

அடுத்ததாக இங்கிலாந்து வீரர்கள் ஜேஸன் ராய் ரூ.2கோடி அடிப்படை விலையிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் ரூ.1.50 கோடி அடிப்படை விலையிலும் ஏலத்தில் அறிவிக்கப்பட்டனர்.

ஆனால், எந்த அணி நிர்வாகத்தினரும் இருவரையும் எடுக்க முன்வரவில்லை.

ஆஸ்திரேலிய அணி வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித் அடிப்படை விலையாக ரூ.2 கோடிக்கு அறிவிக்கப்பட்டார். ஸ்மித் அறிவிக்கப்பட்டதும், ஆர்சிபி அணிக்கு ஏலத்தில் அவரை எடுக்க முயற்சித்தது.

ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.2.20 கோடிக்கு ஸ்மித்தை விலைக்கு வாங்கியது.

மேற்கிந்தியத்தீவுகள் வீரர் லீவிஸ், ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் ரூ.2 கோடி அடிப்படை விலைக்கு அறிவிக்கப்பட்டார். ஆனால், இருவரையும் ஏலத்தில் எடுக்க எந்த அணியினரும் முன்வரவில்லை.

இந்திய வீரர் ஹனுமா விஹாரிக்கு ரூ.ஒரு கோடி அடிப்படை விலையாக வைத்து அறிவிக்கப்பட்ட நிலையில் அவரும் விலைபோகவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே