காசு கொடுத்து காற்றை சுவாசிக்கும் டெல்லி மக்கள்…

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வருவதால் ஆக்சிஜன் மையம் தொடங்கப்பட்டு பெரும்பாலான மக்கள் காசு கொடுத்து காற்றை சுவாசித்து வருகின்றனர்.

டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்தியா கேட் பகுதியில் சூழ்ந்துள்ள காற்று மாசின் அளவு 460 தரக்குறியீடாக பதிவாகியுள்ளது.

டெல்லியை சூழ்ந்துள்ள காற்று மாசினால் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை விட்டு வெளியே வந்து சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் பல்வேறு கல்வி நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அங்கு புதிதாக ஆக்சிஜன் மையம் திறக்கப்பட்டு சுத்தமான காற்று விநியோகிக்கப்படுகிறது .

”ஆக்சிபியூர்” என்ற பெயரில் இயங்கி வரும் இந்த மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, டியூப் வழியாக ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது.

அழகு நிலையம் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த ஃபிளேவரில் காற்றை சுவாசிப்பதற்கான வசதியும் உள்ளது.

அதில் ஆரஞ்சு, எலுமிச்சை, லவங்கப்பட்டை என வித விதமான நறுமணங்களில் ஆக்சிஜன் தயார் செய்யப்பட்டுள்ளது.

காற்று மாசினால் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள டெல்லியில், 5 நிமிடமாவது சுத்தமான காற்றை சுவாசிக்க ஆக்சிஜன் மையங்கள் தொடங்கியிருப்பது பாராட்டத்தக்க செயல் என்றாலும், காற்றையும் காசு கொடுத்து சுவாசிக்கும் நிலையில் குடிமக்கள் தள்ளப்பட்டுவிட்டார்களே என்பது அச்சுறுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே