கடந்த செப்டம்பர் மாதம் சாலையின் நடுவே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் மரணமடைந்தார்.
இதையடுத்து பிகில் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், பிகில் பட ரிலீஸ் தினத்தில் ரசிகர்கள் பேனர் வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
அதன்படி தீபாவளிக்கு திரைக்கு வந்த பிகில் திரைப்படத்தை வரவேற்க பேனர்கள் வைக்கவில்லை.
இந்நிலையில் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் விவசாயிகளின் வங்கிக்கடனை செலுத்தியது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தேனி மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த விவசாயி முனியாண்டி என்பவர் கொடுவிலார்பட்டி கூட்டுறவு வங்கியில் வாங்கியருந்த கால்நடைகள் வளர்ப்புக்கடன் ரூ.49,460 மற்றும் ஜெயமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவர் ஜெயமங்கலம் கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த பயிர்கடன் ரூ.46,000 ஆகியவற்றை விஜய் ரசிகர்கள் செலுத்தியுள்ளனர்.
வங்கிக்கடன் தொகையை செலுத்தியதற்கான ரசீதுகளை தளபதி விஜய் மக்கள் இயக்கம், தேனி மாவட்ட தலைவர் பாண்டி மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் ஆகியோர் இன்று சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஒப்படைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இதுபோன்ற விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மற்றவர்களும் உதவ முன்வர வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.