கடுங்குளிரால் டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!

டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு காரணிகளால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டுவருகிறது.

டெல்லி மக்கள் சில வாரங்களுக்கு முன்னர் காற்று மாசுபாட்டால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், உடல் நலக் கோளாறு ஏற்பட்டு பலரும் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தனர்.

அதிகரிக்கும் வாகனங்கள், தொழிற்சாலைகள், விவசாயக் கழிவுகள் எரிப்பு என இதற்கான காரணங்கள் நீளமானவை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடுமையான குளிரினால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் நேற்று 3.6 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பநிலை பதிவான நிலையில், இன்று அதிகாலை வெப்பநிலை 2.4 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக டெல்லியின் முக்கிய பகுதிகள் வெண்திரை போர்த்தியதை போன்று காணப்பட்டது. 

பொதுமக்கள் சாலைகளில் தீமூட்டி குளிர்காய்ந்தனர். 

இந்த நிலையில், டெல்லியில் குளிரின் தாக்கம் மேலும் அதிகமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 1901-ஆம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியின் வெப்பநிலை மிகவும் குறைந்து காணப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ மற்றும் வாரணாசியில் அம்மாநில முதல்வர் யோகிஆதித்யநாத், நடைப்பாதை மற்றும் ஏழை மக்களுக்காக அமைக்கப்பட்ட இரவு நேர தங்கும் கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

குளிரினால் அவதியுறும் ஏழை மக்களுக்கு இலவசமாக போர்வைகளை விநியோகம் செய்தார். தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே