பத்திரிகையாளர் பிரியா ரமணி மீதான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்..!!

பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, எம்.ஜே.அக்பர், 67, தாக்கல் செய்த மான நஷ்ட வழக்கை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரபல பத்திரிகையாளராக இருந்தவர், எம்.ஜே.அக்பர். ‘தி ஏஷியன் ஏஜ்’ உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

கடந்த, 2014ல், பா.ஜ.,வில் சேர்ந்த இவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசில், வெளியுறவு இணை அமைச்சராக பதவி வகித்தார்.

இந்நிலையில்,20ஆண்டுகளுக்கு முன், எம்.ஜே.அக்பர், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, பத்திரிகையாளர் பிரியா ரமணி, சமூக வலைதளங்களில் கூறியிருந்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேறு சில பெண் பத்திரிகையாளர்களும், அக்பர் மீது, பாலியல் புகார் கூறினர்.

இதையடுத்து, 2018ல், அக்பர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

பின், டில்லி, பாட்டியாலா நீதிமன்றத்தில், பிரியா ரமணிக்கு எதிராக, மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரவீந்திர குமார், தீர்ப்பை இன்றைக்கு(பிப்.,17) ஒத்திவைத்தார்.

இன்று நீதிபதி ரவீந்தர குமார் தனது தீர்ப்பில் கூறியதாவது:

பலாத்கார குற்றச்சாட்டுகளை தெரிவித்ததற்காக பெண்களை தண்டிக்கக்கூடாது. தங்களது குறைகளை, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தெரிவிக்க பெண்களுக்கு இந்திய அரசியல் சாசனம் அனுமதி வழங்கியுள்ளது.

மூடிய அறைகளுக்குள் தான் பலாத்கார குற்றங்கள் பெரும்பாலான நேரங்களில் நடக்கிறது என்பதை மறுக்க முடியாது.

தங்களின் நற்பெயர் மற்றும் அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் காரணமாக, பெரும்பாலான பெண்கள், தங்களுக்கு நேரும் பலாத்கார சம்பவங்கள் குறித்து வெளியே பேசுவதில்லை என தெரிவித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே