தூண்டில் வளைவு எப்படி இருக்கும் என கேட்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி..!!

கடல் அரிப்பு ஏற்பட்டு படகு வீடு எல்லாம் சேதமாகுது எங்களுக்கு தூண்டில் வளைவு கட்டித் தரணும்னு பல வருடமாக கேட்கிறோம் என்று ராகுல் காந்தியிடமும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும் கோரிக்கை வைத்தார் ஒரு மீனவ கிராம பெண். அதைக்கேட்ட முதல்வர் நாராயணசாமி, அந்த பெண்ணிடமே, தூண்டில் வளைவு எப்படிம்மா இருக்கும் என்று எதிர் கேள்வி கேட்டு அதிர்ச்சியளித்தார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்துள்ளார்.

முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதிக்கு சென்று அங்குள்ள தென்னந்தோப்பில் மீனவ பெண்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவ கிராமங்களில் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலகட்டங்களில் கடல் எழும் பேரலை காரணமாக கடல்நீர் உட்புகுவது தொடர்கதையாகி வருகிறது. சில நேரங்களில் கடலில் அரிப்பால் வீடுகள் கடும் சேதமடைகிறது.

இதை தடுக்கும் வகையில் கடல் அலை தாக்கத்தை குறைக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

முத்தியால்பேட்டை மீனவர் கிராமத்தில் கடல் சீற்றம் அதிக அளவில் உள்ளது.

இதனால் அவ்வப்போது கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடுகிறது. இதைத் தடுக்க அரசு தூண்டில் வளைவு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இன்றைய தினம் ராகுல் காந்தி மீனவ பெண்களிடம் பேசும் போது தூண்டில் வளைவு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

அதைக்கேட்டு முதல்வர் நாராயணசாமி வெறுமனே தலைமை மட்டும் ஆட்டிவிட்டு பதில் எதுவும் சொல்லாமல் இருந்தார்.

இதையடுத்து மற்றொரு பெண்ணிடம் மைக் கொடுக்கப்பட்டது. அந்த பெண்ணும், எங்கள் ஊரில் தூண்டில் வளைவு அமைத்தால் கடல் நீர் ஊருக்குள் புகாமல் தடுக்கலாம்.

எங்கள் வீடும், படகுகளும் சேதமடையாமல் தப்பிக்கும் என்று சொன்னார்.

அதற்கும் முதல்வர் பதில் சொல்லாமல் இருக்கவே, ராகுல்காந்தி மைக்கை வாங்கி நாராயணசாமியிடம் கொடுத்தார்.

மைக் பிடித்து நாராயணசாமி பேச ஆரம்பித்ததுதான் ஹைலைட்.

அந்த பெண் சொன்னதை ஆங்கிலத்தில் ஓராளவு மொழி பெயர்த்த முதல்வர் நாராயணசாமி, தூண்டில் வளைவு என்று சொல்லி விட்டு அது எப்படிம்மா இருக்கும் தூண்டில் வளைவு என்று கேட்டு அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகாலமாக காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. பல ஆண்டுகாலமாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் நடந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தூண்டில் வளைவு அமைத்துக்கொடுக்காமல் மக்களை தவிக்க விடுவதோடு அப்படி என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு முதல்வர் இருக்கிறார் என்பதுதான் பலரது ஆதங்கமாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே