தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சென்னையிலிருந்து 4 ஆயிரத்து 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் மற்ற ஊர்களில் இருந்து 8310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி வரும் வியாழக்கிழமை முதல் 26ம் தேதி வரை சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2225 பேருந்துகளுடன் கூடுதலாக 4 ஆயிரத்து 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி மூன்று நாட்களும் சேர்த்து சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதேபோல் பிற ஊர்களில் இருந்து 8310 பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்காக 27ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 4 ஆயிரத்து 627 சிறப்பு பேருந்துகள் உள்பட 13 ஆயிரத்து 527 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மற்ற ஊர்களுக்கு 6921 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு மையங்கள் உள்பட 30 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த முன்பதிவு மையங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் வியாழக்கிழமை தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே