இராமநாதபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் – 1100 பேர் மீது வழக்குப்பதிவு!

இராமநாதபுரத்தில் கனிமொழி எம்பி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 1,100 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சந்தை திடல் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் வரிசை முகமது தலைமை வகித்தார்.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன், திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்வில் குடியுரிமை சட்டத்திருத்தம் பற்றியும், மத்திய பாஜக அரசை பற்றியும் கடுமையான விமர்சித்து பேசினர். இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முதலில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் நடத்துவதற்கு காவல் துறையினரிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறியுள்ள கேணிக்கரை காவல் துறையினர் சுமார் 1100 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கலந்து கொண்ட கூட்டத்தில் 1,100 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே