பகலிரவு டெஸ்ட் போட்டி – பிங்க் நிற பந்துகளின் பயணம்

இந்திய கிரிக்கெட் அணி தனது முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் நாளை ஆடுகிறது. முதல் முறையாக பிங்க் நிற பந்தில் போட்டி நடைபெறவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிரடிக்குப் பெயர் பெற்ற 20 ஓவர் போட்டிகள் வந்தபின் டெஸ்ட் போட்டிகளுக்கான வரவேற்பு குறைந்தது.

பார்வையாளர்களின்றி வெறிச்சோடிய மைதானங்களில் டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படுகின்றன.

விராட் கோலி போன்ற சிறந்த வீரர்கள் காலியான மைதானங்கள் முன்பு ஆடுவது சங்கடமாக இருப்பதாக வருத்தப்பட்டார் முன்னாள் கேப்டன் கங்குலி.

அதனால் பகலிரவுப் போட்டியாக நடத்தினால் பணிக்குச் செல்வோரும் மாலை அல்லது இரவில் போட்டியைக் காண வருவார்கள் எனக் கருதினார் கங்குலி.

சொல்லி வைத்தது போல் கடந்த மாத இறுதியில் பிசிசிஐ-யின் தலைவராக தேர்வானார் கங்குலி.

அவர் தலைவரானதுமே முதல் பணியாக பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த ஏற்பாடு செய்தார். அடுத்ததாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் பேசி ஒப்புக்கொள்ள வைத்தார்.

கங்குலியின் தீவிர முயற்சியால், இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை பகல் 1 மணிக்குத் தொடங்குகிறது.

இரவு 8 வரை தினமும் போட்டி நடைபெறும்.

சிவப்பு நிற பந்துகளை விட தெளிவாக தெரிவதால் பகலிரவுப் போட்டியில் முக்கிய மாற்றமாக பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

வழக்கமான சிவப்பு பந்து தோலினால் ஆனது. அதனால் சிவப்பு நிறம் இயற்கையாகவே கிடைக்கிறது. ஆனால் பிங்க் பந்துகளுக்கு செயற்கை நிறம் பூசப்படுகிறது.

பிங்க் பந்தைப் பொருத்தவரை பேட்டிங் செய்வது சற்று கடினமாகவே இருக்கும்.

பவுலரின் கையில் இருந்து பந்து விடுபடும்போதே அதை கணிக்கும் திறன்மிக்க பேட்ஸ்மேன் பிங்க் பந்துக்கு தாக்குப்பிடிக்கலாம்.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமின்றி ஸ்பின்னர்களுக்கும் இது கைகொடுக்கும்.

ஈடன் கார்டனில் அடர்ந்த புற்கள் அதிகம் என்பதாலும், களிமண் களம் என்பதாலும் பிங்க் பந்தின் பளபளப்பு மற்ற மைதானங்களைக் காட்டிலும் கூடுதலாக தாக்குப் பிடிக்கும்.

பிங்க் பந்தில் ஆடுவதற்காக இந்திய அணி இந்தூரில் இருந்தே பயிற்சியில் ஈடுபட்டு தயார்படுத்திக் கொண்டுள்ளது.

கொல்கத்தா மைதானமும் பிங்க் நிற தீம் அடிப்படையில் பிங்க் பந்துப் போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

போட்டியை வங்கதேச பிரதமர் ஷேக் அசீனாவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தொடங்கி வைக்கவுள்ளனர்.

2015-ம் ஆண்டு நவம்பரில் நடந்த உலகின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வென்றது.

இதுவரை நடந்த 11 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 5 முறை வென்றுள்ளது. 3 முறை தோற்ற மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே