சிலிண்டர் வினியோகம் செய்யும்போது டெலிவரி கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டணத்துடன் விநியோக கட்டணமும் ரஷீதில் குறிப்பிடப்படும் நிலையில், கூடுதலாக டெலிவரி கட்டணம் வசூலிக்கப்படுவதாக சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகரங்கன் மனுதாக்கல் செய்து இருந்தார்.
அதில் அடுக்குமாடி குடியிருப்பு தளங்களுக்கு ஏற்ப 20 முதல் 100 ரூபாய் வரை வலுக் கட்டாயமாக வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் 23 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் இருக்கும் நிலையில் டெலிவரி கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் புகார் தெரிவித்தும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மனுதாரர் ஆதங்கப்பட்டிருந்தார்.
அதனை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷாயி அமர்வு டெலிவரி கட்டணங்கள் வசூலிப்பது குறித்து 2,124 புகார்கள் இருக்கும் நிலையில், அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவன வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினர்.
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டதற்கு, அது தொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் இல்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் டெலிவரி கட்டணம் என்ற பெயரில் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நவம்பர் 1-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.