நீட் ஆள்மாறாட்ட வழக்கு: உதித் சூர்யாவின் தந்தையே வில்லன் – நீதிபதி கருத்து

உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் அவரது தந்தை வெங்கடேசனே வில்லன் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்?? என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் கைதான பிறகு முன்ஜாமீன் மனுவையே ஜாமீன் மனுவாக விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மாணவரின் வயது மற்றும் மன நலனை கருத்தில் கொண்டு ஜாமீன் மனுவாக விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது உதித் சூர்யா நீட்டில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் அவரது தந்தை வெங்கடேசனே வில்லன் என நீதிபதி கூறினார்.

நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் பலருக்கும் தொடர்புள்ளதாகவும் உதித் சூர்யா தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை என்றும் அதனால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் உதித் சூர்யாவின் தந்தை தேனி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு கைது செய்யப்பட்டு 15 நாட்களாகியும் ஏன் காவலில் எடுத்து விசாரிக்க வில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

வெங்கடேசன் தனது ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றால் உதித் சூர்யாவிற்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும் தேனி நீதிமன்றத்தில் உள்ள வெங்கடேசனின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றி பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

அக்டோபர் 17ஆம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது உதித் சூர்யாவிற்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே