கொரோனா வைரஸால் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி…

கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக யாரும் இதுவரை எதிர்பாராத வகையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு பூஜ்ஜியம் டாலருக்கும் கீழே சென்றுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளின் மருத்துவம், பொது சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை புரட்டிப்போட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா உள்பட மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள், ஊரடங்கு அமல்படுத்தியிருப்பதால் உள்நாட்டு பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

போர் உள்ளிட்ட சூழல்களில் நிலவும் பொருளாதார நிலையை விட தற்போது மிக மோசமாக உள்ளதாக வணிகம் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

இதனால், பெட்ரோல் – டீசல் தேவைகள் பெருமளவில் குறைந்துள்ளன.

தேவைகள் குறைந்துள்ளதால், உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறைந்துள்ளது.

இதனால், விலையின் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்தது.

ஆனால், வரலாற்றில் இந்த நாளை எழுதிவைக்கும் படி, ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை பூஜ்ஜியம் டாலருக்கும் கீழே சென்றுள்ளது.

அதாவது, இந்த விலை குறைவை எப்படி பார்க்கலாம் என்றால், கச்சா எண்ணெய் வாங்குபவர்கள் தற்போது தேவையின்மை காரணமாக வியாபாரத்தை மேற்கொள்ளவில்லை.

ஆனால், கச்சா எண்ணெய் நிறுவனங்கள், உற்பத்தி செய்யப்பட்டுள்ள எண்ணெயை சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லை.

இதனால், உற்பத்தி நிறுவனங்கள் வாங்குபவர்களுக்கு பணத்தைக் கொடுத்து, கச்சா எண்ணெயை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் நிலைக்கு சமமாகும்.

அமெரிக்க பங்குச்சந்தை நேற்று (திங்கள் கிழமை ) தொடங்கியது முதலே WTI கச்சா எண்ணெயின் (West Texas Intermediate) விலை வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டே வந்தது.

ஒரு பேரல் எனப்படும் 158.98 லிட்டர் கச்சா எண்ணெயின் விலை ஒரு அமெரிக்க டாலருக்கும் கீழே சென்றது. இந்திய மதிப்பில் இது 76.66 ரூபாய் ஆகும்.

தொடர்ந்து விலை வீழ்ச்சியடைய, கச்சா எண்ணெயின் விலை பூஜ்ஜியத்திற்கும் கீழே சென்றது. அதாவது, -39.14 அமெரிக்க டாலர்கள் என விலை வீழ்ந்தது.

இந்த நிலை வரும் என்று எண்ணெய் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்கள் கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும்.

எனினும், இந்தியா வணிகம் செய்யும் brent கச்சா எண்ணெய் விலையில் பெரிய வீழ்ச்சி இல்லை. ஒரு பேரல் 25 டாலர்களில் விற்பனை ஆகிறது.

ஒருவேளை இந்த வகை கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தாலும், இந்தியாவிலும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், விலையை குறைக்க வாய்ப்பு இல்லை.

ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டாலும், கொரோனா ஏற்படுத்திய பொருளாதார தாக்கத்தை சரிசெய்வது உள்ளிட்ட பல தேவைகளுக்காக நிதி ஆதாரம் தேவைப்படுவதால், இந்த கச்சா எண்ணெய் விலை குறைவை, அரசு பயன்படுத்திக்கொள்ளும் என்றே கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே