சுபஸ்ரீ விவகாரம்: இழப்பீடு குறித்து 4 வாரங்களுக்கு பரிசீலிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தருமாறு சுபஸ்ரீ தந்தை தொடர்ந்த வழக்கில் 4 வாரத்துக்குள் பரிசீலித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், கடந்த செப்டம்பர் 12ம் தேதி, பள்ளிக்கரணை சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சாலையின் நடுவே திருமண விளம்பர பேனர் சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்தது. நிலைதடுமாறி சுபஸ்ரீ கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுபஸ்ரீ மரணத்துக்கு இழப்பீடாக தமிழக அரசு 5 லட்சம் ரூபாயும், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் 7 லட்சம் ரூபாயும் இழப்பீடாக தந்தன.

இந் நிலையில், மகளின் மரணத்துக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் கேட்டு சுபஸ்ரீயின் தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, சுபஸ்ரீயின் தந்தை கொடுத்துள்ள விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சுபஸ்ரீ தந்தையின் இழப்பீடு கோரிக்கையை நான்கு வாரத்துக்குள் பரிசீலித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் வரும் 22ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே