எப்போது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமமுகவில் இருந்த புகழேந்தி அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கிறார்.
டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சி தொடங்கிய போது அவருக்கு எல்லாமுமாக இருந்தவர்கள் இருவர்.
ஒருவர் தங்க தமிழ்ச்செல்வன். அவர் இப்போது திமுகவில் முக்கிய பதவியில் இருக்கிறார். ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு திமுக சார்பில் பேசி வருகிறார்.
மற்றொருவர் புகழேந்தி. டிடிவியின் வலதுகரம் போலவே வலம் வந்தவர். ஒரு கட்டத்தில் டிடிவியின் மனசாட்சி என்று கூட பலரால் வர்ணிக்கப்பட்டவர்.
ஆனால் அண்மைக்காலமாக டிடிவி தினகரன் கட்சியை கம்பெனி போல நடத்தி வருகிறார் என்று ஓபனாக குற்றம் சாட்டினார்.
அதனால் டிடிவி தினகரனுக்கும், புகழேந்திக்கும் ஏழாம் பொருத்தமானது.
விருப்பம் இல்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் கட்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் டிடிவி விமர்சித்தார்.
அதே நேரத்தில் சேலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது அதிமுகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பேட்டி கொடுத்தார்.
இப்போது யாரும் எதிர்பாராத வகையில் தம்மை அதிமுகவில் இணைத்துக் கொண்டார் புகழேந்தி.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் ஆதரவாளர்களுடன் சேர்ந்தார்.