TNPSC முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் சரண்!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது.

முறைகேடாக தேர்வு எழுதி அரசுப் பணியில் சேர்ந்தவர்கள், இடைத்தரகர்கள், மோசடிக்கு முக்கிய நபராக செயல்பட்ட முதல்நிலை காவலர் சித்தாண்டி என 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும், இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

ஜெயக்குமார் ஆந்திரா தப்பிச் சென்றுவிட்டதாகவும், பெங்களூரில் இருப்பதாகவும், மேல்மருவத்தூரில் பதுங்கியிருப்பதாகவும் பலவிதமான தகவல்கள் உலா வந்தன.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை 23ஆவது மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் சரணடைந்தார். வழக்கறிஞருடன் நீதிமன்றத்திற்கு வந்த அவர், நீதிபதி கவுதமன் முன்னிலையில் சரணடைந்தார்.

மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைதான டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனை, ராமேஸ்வரம் கொண்டு சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கைதான 16 பேரில் முக்கிய நபரான டிஎன்பிசி ஊழியர் ஓம்காந்தன் இடைத்தர்கர்கள் மற்றும் தேர்வர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து லட்சக்கணக்கில் பணபரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை 5 நாள் காவலில் எடுத்துள்ள சிபிசிஐடி அதிகாரிகள், அதிக அளவில் முறைகேடு நடந்துள்ள ராமேஸ்வரம் தேர்வு மையங்களுக்கு நேரில்  அழைத்துச்சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதையொட்டி இன்று அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இன்று இரவு அவர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ராமேஷ்வரம் அழைத்துச்செல்லப்படுகிறார்.

இதற்கிடையே குரூப்-2 ஏ முறைகேடு தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தேர்வர் ஆகிய இருவரிடம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் கிராம நிர்வாக அலுவலருக்கு குரூப் 4 முறைகேட்டிலும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே