இந்தியாவிலேயே புனேவுக்கு அடுத்தபடியாக சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டில் கொரானோ வைரஸ் பாதிப்பு கண்டறியும் ஆய்வகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் நாளைக்குள் இதன் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கொரானோ வைரஸால் கேரளாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள தகவல் கவலை அளிக்கிறது.

இலங்கை, சிங்கப்பூர், நேபால் ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டதாக தகவல் வந்த போதே நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

சென்னை விமான நிலையம் மட்டுமல்லாமல் மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்களிலும் சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து தமிழகம் வந்தவர்கள் யாருக்கும் நோய் அறிகுறிகள் இல்லை என்றும் சீனாவில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து அவர்களின் வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சென்னை விமான நிலையம் முழுவதும் தொடர் கண்காணிப்பில் உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனைகள் வழங்கி வருவதாகவும் அது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

சீனாவில் உள்ள தமிழக மாணவர்கள் நன்றாக இருப்பதாக சீன தூதரகம் கடிதம் அனுப்பியுள்ளது.

பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இந்த சூழலில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே