இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,447 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 206 இல் இருந்து 239 ஆக உயா்ந்துள்ளது.
6,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தோரின் எண்ணிக்கை 516 இல் இருந்து 643 ஆக உயந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 1,574 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
உயிரிழப்பும் அந்த மாநிலத்தில்தான் மிக அதிகமாக 97 ஆக உள்ளது.
மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் மட்டும் 1000 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா நோய்த்தொற்று அதிகம் பாதிக்கப்பட்டோரின் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 911 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்பும் 9 ஆக உள்ளது.
சென்னையில் 15 மண்டலங்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 163-இல் இருந்து 172 ஆக அதிகரித்துள்ளது.
தில்லியில் 903 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துவிட்டனா்.
குஜராத் மாநிலத்தில் 17 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 16 பேரும், பஞ்சாபில் 11 பேரும் உயிரிழந்துவிட்டனா்.
தெலங்கானாவில் 473 பேருக்கும், ஆந்திராவில் 363 பேருக்கும், ராஜஸ்தானில் 463 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 431 பேருக்கும், ஆந்திரத்தில் 363 பேருக்கும், கேரளத்தில் 357 பேருக்கும், குஜராத்தில் 241 பேருக்கும் இதுவரை கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 643 பேர் கரோனாவில் இருந்து மீண்டு, வீடு திரும்பியுள்ளனா்.
வடகிழக்கு மாநிலங்களில் மட்டும்தான் கரோனா நோய்த்தொற்று குறைவாக உள்ளது.
அங்கு மணிப்பூரில் இருவருக்கும், அருணாசலப் பிரதேசம், திரிபுரா, மிஸோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.
மேகாலயத்தில் மட்டும் இதுவரை யாருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை.
எனவே, அங்கு வரும் 15-ஆம் தேதி ஊரடங்கு முழுமையாக விலகிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.